உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மூன்றாவது நாளாக இன்றும் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டுமென்றும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன .இதையடுத்து தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை ரஷ்யா தோல்வியடைய செய்தது.
இதனிடையே இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி ரோமன் தற்போதைய சூழல் ஏற்படுவதற்கான காரணத்தை இந்தியா ஆழமாக புரிந்து கொண்டுள்ளது. எனவே பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் இந்தியாவின் ஆதரவை உக்ரைனும் எதிர்ப்பார்த்த சூழலில் இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.