ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
விருதுக்கு தகுதியான வீரர்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரைக் குழுவால் தீர்மானிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
வெற்றியாளர்கள் ஒவ்வொரு மாதத்திலும் அதன் 2-ஆவது திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளனர்.
மாதத்தின் சிறந்த வீரர் விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ள நிலையில், அந்த விருதுக்காக இந்திய வீரர்களான ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், நடராஜன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.
இவர்கள் தவிர இங்கிலாந்தின் ஜோ ரூட், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் உள்பட சில வீரர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன.
இந்நிலையில் முழுப் பட்டியலில் இருந்து தற்போது மூன்று பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ரிஷப் பந்த், ஜோ ரூட், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் ஆண்கள் பிரிவிலும் பாகிஸ்தானின் டயனா பைக், தென் ஆபிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், தென் ஆபிரிக்காவின் காப் ஆகியோர் மகளிர் பிரிவிலும் பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.